அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்
First Published : Tuesday , 9th January 2018 06:10:21 PM
Last Updated : Tuesday , 9th January 2018 06:10:21 PM
கலசப்பாக்கம் அருகே செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தை, அக்காவை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65), விவசாயி.
இவரது மகள்கள் கல்யாணி(40), சித்ரா(30). மகன் சிவனேசன்(32). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து கல்யாணி கடந்த 2 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
மகன் சிவனேசனுக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சிவனேசன் தினமும் தந்தை, அக்கா, தங்கையிடம் சண்டைபோட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த சிவனேசன், செலவுக்கு பணம் தருமாறு தந்தை ராமச்சந்திரனிடம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரவில்லை.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவனேசன், அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமச்சந்திரன் தலையில் போட்டுள்ளார்.
இதனை தடுக்க வந்த கல்யாணியையும் அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த தந்தையும், மகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து சிவனேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தை மற்றும் அக்காவை அம்மிக்கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.