இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த இந்தியா

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த  இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுலபமாக வெற்றி பெற்ற இந்திய அணி அதன் சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்டில் சொதப்பினாலும், ஒரு நாள் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது மற்றும் 3-வது ஆட்டங்களில் முறையே இந்தியா 133 ரன் மற்றும் 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கணுக்காலில் வலியால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு பதிலாக தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டார். இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த 25 வயதான தவால் குல்கர்னி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

இங்கிலாந்து அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இடது கால் பாதத்தில் காயமடைந்துள்ள இயான் பெல்லுக்கு பதிலாக கேரி பேலன்சும், பென் ஸ்டோக்ஸ், டிரெட்வெல் ஆகியோர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ஹாரி குர்னே, மொயின் அலியும் இடம் பிடித்தனர்.

ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக காணப்பட்டதாலும், வானில் ஓரளவு மேகமூட்டம் தென்பட்டதாலும் வேகப்பந்து வீச்சு எடுபடலாம் என்று கருதிய இந்திய கேப்டன் டோனி டாஸ் ஜெயித்ததும் தயக்கமின்றி இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். டோனியின் கணிப்புபடியே அடுத்த அரைமணி நேரத்தில் பலன் கிட்டியது.

கேப்டன் அலஸ்டயர் குக்கும், அலெக்ஸ் ஹாலசும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். முந்தைய இரு ஆட்டங்களிலும் ஜோடியாக அரைசதத்திற்கு மேல் எடுத்த இவர்கள், இந்த முறை நிலைக்க முடியவில்லை.

புவனேஷ்வர்குமார் வீசிய மிரட்டலான ‘இன்ஸ்விங்’கரில் ஹாலஸ் (6 ரன்) கிளீன் போல்டு ஆனார். அதே ஓவரில் அலஸ்டர் குக் (9 ரன்), ‘கல்லி’ திசையில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேரி பேலன்ஸ் (7 ரன்), முகமது ஷமியின் வேகத்தில் அடங்கினார். இதனால் நிலைகுலைந்து போன இங்கிலாந்து அணி 23 ரன்னுக்குள் (8 ஓவர்) 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து அல்லோல் பட்டது.

இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், இயான் மோர்கனும் இணைந்து அணியை மீட்க நிதானம் காட்டினர். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சில் இவர்களால் துரிதமாக ரன் எடுக்க இயலவில்லை. இதனால் 27.2 ஓவர்களில் தான் இங்கிலாந்து 100 ரன்களை தொட்டது. 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த இவர்களை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா பிரித்தார். மோர்கன் 32 ரன்னிலும் (58 பந்து, 3 பவுண்டரி), ஜோ ரூட் 44 ரன்னிலும் (81 பந்து, 2 பவுண்டரி) அடுத்தடுத்து வெளியேறினர்.


இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு இறங்கிய மொயீன் அலி ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும், அவருக்கு எதிர்முனை வீரர்களிடம் இருந்து எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அஸ்வின் ஓவர்களில் 2 சிக்சரும், ரெய்னாவின் பந்து வீச்சில் ஒரு சிக்சரும் விரட்டி உள்ளூர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த மொயீன் அலி, அணி 200 ரன்களை கடக்க வைத்த திருப்தியுடன் 67 ரன்களில் (50 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முடிவில் இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 மெய்டனுடன் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


அடுத்து 207 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர். சில ஓவர்கள் (முதல் 4 ஓவரில் 4 ரன்) பொறுமையை கடைபிடித்த இவர்கள் அதன் பிறகு அதிரடியில் இறங்கினர். ஆண்டர்சனின் ஒரே ஓவரில் ரஹானே 4 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு அடிகோலினார்.

இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளிய இவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் கடக்க வைத்தனர். சொந்த மண்ணில் ஆடிய போதிலும் நமது பேட்ஸ்மேன்களுக்கு, இங்கிலாந்து பவுலர்களால் குடைச்சல் கொடுக்க முடியவில்லை.

ரன்வேட்டையாடுவதில் தவானை விட வேகம் காட்டிய ரஹானே அவ்வப்போது சிக்சரும் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக ஆடிய ரஹானே ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். தொடக்க விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்த நிலையில், ரஹானே 106 ரன்களில் (100 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக இந்திய ஜோடி ஓர் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன் (183 ரன்) இது தான்.

அடுத்து விராட் கோலி ஆட வந்தார். அதே சமயம் தனது ரன்வேகத்தை தீவிரப்படுத்திய ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஹாரி குர்னேவின் ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இங்கிலாந்தின் இலக்கு குறைவு என்பதால் 3 ரன்னில் தவான் சதத்தை எட்ட முடியாமல் போய் விட்டது.

இந்திய அணி 30.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. 117 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் பெரிய வெற்றியாகவும் இது அமைந்தது. தவான் 97 ரன்களுடன் (81 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, டெஸ்டில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறது.

அது மட்டுமின்றி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் இந்தியா சாய்ப்பது 24 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இந்திய அணி இங்கிலாந்தில் நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடுவது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு ஒரே ஒரு முறையாக அங்கு 1990-ம் ஆண்டு தொடரை 2-0 என்ற கணக்கில் முகமது அசாருதீனின் தலைமையில் கைப்பற்றி இருந்தது நினைவு கூரத்தக்கது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 5-ந்தேதி லீட்சில் நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இங்கிலாந்து

குக் (சி) ரெய்னா (பி)

புவனேஷ்வர் 9

ஹாலஸ் (பி) புவனேஷ்வர் 6

பேலன்ஸ் (சி) ரஹானே

(பி) முகமது ஷமி 7

ஜோ ரூட் (சி) குல்கர்னி

(பி) ரெய்னா 44

மோர்கன் (சி) ரெய்னா

(பி) ஜடேஜா 32

ஜோஸ் பட்லர் எல்.பி.டபிள்யூ

(பி) முகமது ஷமி 11

மொயீன் அலி(பி)அஸ்வின் 67

வோக்ஸ் (ரன்-அவுட்) 10

ஸ்டீவன் பின் (பி) ஜடேஜா 2

ஆண்டர்சன் (நாட்-அவுட்) 1

குர்னே (பி) முகமது ஷமி 3

எக்ஸ்டிரா 14

மொத்தம் (49.3 ஓவர்களில்

ஆல்-அவுட்) 206

விக்கெட் வீழ்ச்சி: 1-15, 2-16, 3-23, 4-103, 5-114, 6-164, 7-194, 8-201, 9-202

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 8-3-14-2

தவால் குல்கர்னி 7-0-35-0

முகமது ஷமி 7.3-1-28-3

அஸ்வின் 10-0-48-1

ரவீந்திர ஜடேஜா 10-0-40-2

ரெய்னா 7-0-36-1

இந்தியா

ரஹானே (சி) குக் (பி)

குர்னே 106

தவான் (நாட்-அவுட்) 97

விராட் கோலி (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 8

மொத்தம் (30.3 ஓவர்களில்

ஒரு விக்கெட்டுக்கு) 212

விக்கெட் வீழ்ச்சி: 1-183

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 6-1-38-0

குர்னே 6.3-0-51-1

ஸ்டீவன் பின் 7-0-38-0

கிறிஸ் வோக்ஸ் 4-0-40-0

மொயீன் அலி 7-0-40-0
https://goo.gl/L1Pa6R


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்