இந்திய பவுலர்களுக்கு அடிபணிந்த பாக்

இந்திய பவுலர்களுக்கு அடிபணிந்த பாக்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழையால் போட்டி அடிக்கடி பாதிக்கப்பட சுவாரஸ்யம் குறைந்து போனது.

பேட்டிங், பவுலிங்கில் பாகிஸ்தான் சொதப்ப, வழக்கமான ஆக்ரோஷத்தை காண முடியவில்லை.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், இப்போட்டி பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.  "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில்' துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இவரது, பந்தில் "அபாய' ஜாம்ஷெத்(2) வெளியேறினார். 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 16 நிமிட தாமதத்துக்குப் பின், போட்டி துவங்கியதும் புவனேஷ்வரின் பந்தில் முகமது ஹபீஸ் (27), தோனியின் "தீயான' கேட்ச்சில் அவுட்டானார்.

நீண்ட நேரம் களத்தில் நின்ற கம்ரான் அக்மல் (21 ரன், 38 பந்து), அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 19 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்த போது, பலத்த மழை பெய்தது.

அடுத்து 2 மணி நேரம், 37 நிமிட தாமதத்துக்குப் பின் போட்டி துவங்கியது. இம்முறை தலா 40 ஓவர்களாக மாற்றப்பட்டது.

பின் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்களது நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். கேப்டன் மிஸ்பா உல் ஹக் (22), ஜடேஜா பந்தில் போல்டானார்.

சுதாரித்து விளையாடிய ஆசாத் சபிக், ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாசினார். இவர் 41 ரன்கள் எடுத்தார். இரண்டு பவுண்டரி அடித்த சோயப் மாலிக்கை (17), ஜடேஜா வெளியேற்றினார்.

பாகிஸ்தான் அணி 39.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது. உமர் அமின் (27) அவுட்டாகாமல் இருந்தார்.

"டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, இந்திய அணி 40 ஓவரில் 168 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் தந்தனர். முகமது இர்பான் பந்துகளை ரோகித் சர்மா, அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பினார். தன் பங்கிற்கு தவானும் பவுண்டரிகள் அடித்தார். 8.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 47 ரன்கள் எடுத்த போது மழையால், போட்டி தடைபட்டது. பின் ஆட்டம் துவங்கியதும், அஜ்மல் வலையில் ரோகித் சர்மா(18) சிக்கினார். 11.3 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

பின் மழை நின்றதும், 22 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மீண்டும் மாற்றப்பட்டது. தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தவான், ரியாஸ் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 48 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். தினேஷ் கார்த்திக்(11*), கோஹ்லி(22*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார்.

 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பாகிஸ்தானுக்கு எதிராக 2004 (பர்மிங்காம்), 2009 (செஞ்சுரியன்) என, இரு முறை மோதிய போட்டியில் இந்திய அணி தோற்றது. நேற்று முதல் முறையாக வென்ற தோனி தலைமையிலான அணி புதிய வரலாறு படைத்தது.

* தவிர, இம்முறை லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நூறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
https://goo.gl/BV63is


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்