உமேஷ் யாதவ் அபாரம் : திக்கு முக்காடிய ஆஸ்திரேலியா

உமேஷ் யாதவ் அபாரம் : திக்கு முக்காடிய ஆஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி, 243 ரன்கள் வித்தியாசத்தில், இமாலய வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய தினேஷ் கார்த்திக், சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 65 ரன்னுக்கு சுருண்டு, பரிதாபமாக வீழ்ந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நாளை துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி மந்தமான துவக்கம் கொடுத்தது. முரளி விஜய் (1), அம்பயரின் தவறான தீர்ப்பில் எல்.பி.டபிள்யு., ஆனார். கடந்த போட்டியில் சதம் அடித்த விராத் கோஹ்லி, இம்முறை 9 ரன்னுடன் நடையைக் கட்டினார்.

அடுத்த சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (10) வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, மெக்கே வேகத்தில் "டக்' அவுட்டானார். நீண்ட நேரம் களத்தில் இருந்த ஷிகர் தவானும் (17) அணியை கைவிட்டார். இந்திய அணி 55 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின் இணைந்த தினேஷ் கார்த்திக், தோனி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களது நிதான ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இதன் பின் இருவரும் அப்படியே அதிரடிக்கு மாறினர்.

வாட்சன் பந்தில் தோனியும், பால்க்னர் பந்தில் தினேஷ் கார்த்திக்கும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். மார்ஷ் ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த தோனி அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் மொத்தம் 22 ரன்கள் எடுக்கப்பட்டன.

மறுமுனையில் அபார ஆட்டத்தை தொடர்ந்த தினேஷ் கார்த்திக், ஸ்டார்க் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாசினார். இவர், தொடர்ந்து இரண்டாவது பயிற்சி போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். ஜான்சன் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து மிரட்டினார் தோனி.

ஆறாவது விக்கெட்டுக்கு 211 ரன்கள் சேர்த்த நிலையில், தோனி 91 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா, தன்பங்கிற்கு ஸ்டார்க் ஓவரில், தலா ஒரு சிக்சர், பவுண்டரி என, விளாசினார்.

இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு, 308 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (146), ஜடேஜா (14) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க், மெக்கே இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு, உமேஷ் யாதவ் பெரும் தொல்லை கொடுத்தார். இவரது வேகத்தில் "டாப் ஆர்டர்' அப்படியே தகர்ந்தது. முதலில் வேட் (5) போல்டானார். வார்னர் "டக்' அவுட்டானார். அடுத்து பெய்லியும் (1) போல்டானார்.

தொடர்ந்து மிரட்டிய உமேஷ் யாதவ், தனது ஐந்தாவது ஓவரில் ஹியுஸ் (14), மார்ஷ்(0) என, இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார்.

ஆஸ்திரேலிய அணி 28 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அணியை மீட்பார் என்று நம்பப்பட்ட வாட்சனை (4), இஷாந்த் சர்மா "கவனித்து' அனுப்பினார். தொடர்ந்து பால்க்னர் (7), ஜான்சன் (2), இஷாந்த் வேகத்தில் வீழ்ந்தனர். ஸ்டார்க் (0) ரன் அவுட்டானார். கடைசியில் வோஜஸ் (23) அஷ்வின் சுழலில் சிக்கினார்.

ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவரில், 65 ரன்னுக்கு சுருண்டு, 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மெக்கே (4) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் <உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதிய மற்றொரு பயிற்சி போட்டி பர்மிங்காமில் நடந்தது. "டாஸ்' வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் (22), சாமுவேல்ஸ் (18) ஆறுதல் அளித்தனர். சார்லஸ் (58), பிராவோ (71), சர்வான்(55) கைகொடுத்தனர். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. போலார்டு (29), ராம்பால் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் திசரா பெரேரா, எரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு குசல் பெரேரா (24), ஜெயவர்தனா (29) நீடிக்கவில்லை. பொறுப்புணர்ந்து விளையாடிய சங்ககரா (56) அரை சதம் கடந்தார். போராடிய தில்கரா 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

முடிவில், இலங்கை அணி 47 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி,17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிராவோ 3, ராம்பால், நரைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
https://goo.gl/5Bt5sK


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்