உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

உலக கோப்பையில்  பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது. கோலி சதத்தால் உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பரம எதிரிகளான இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் (பி பிரிவு) அடிலெய்டில் நேற்று அரங்கேறியது.

மைதானத்தில் குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இந்தியர்கள். இந்திய அணிக்குரிய புளூ நிற டி ஷர்ட்டுகளும் தேசிய கொடிகளுமே அதிகமாக ஆக்கிரமித்திருந்தன.

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை எச்சரிக்கையுடன் தொடங்கினர்.

ரோகித் சர்மா 15 ரன்
பவுன்சர்களாக போட்டுத் தாக்கி இந்திய பேட்ஸ்மேன்களை கலங்கடிக்க வேண்டும் என்ற வியூகங்களுடன் பாகிஸ்தான் பவுலர்கள் செயல்பட்டனர். 4–வது ஓவரில் முதலாவது பவுண்டரியை ஷிகர் தவான் அடித்தார். ஆஜானுபாகுவான உயரம் கொண்ட முகமது இர்பானின் ஓவரில் ரோகித் சர்மா 2 பவுண்டரியும், தவான் தனது பங்குக்கு ஒரு சிக்சரும் அடித்தனர். ஆனால் ரோகித் சர்மாவின் பேட்டிங்குக்கு ஆயுசு குறைவு. அவர் 15 ரன்னில் (20 பந்து) சோகைல் கானின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து இறங்கிய துணை கேப்டன் விராட் கோலி வந்த வேகத்தில் நடையை கட்டியிருக்க வேண்டியது. 3 ரன்னில் இருந்த போது தூக்கியடித்த பந்தை, யாசிர் ஷா ‘டைவ்’ அடித்தும் கையில் சிக்கவில்லை.

கோலிக்கு அதிர்ஷ்டம்
தவானும், கோலியும் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர். ஆடுகளத்தில் பந்து திடீரென எழும்புவதும், திடீரென தாழ்ந்து செல்வதும் என்று இரண்டு வித தன்மையில் காணப்பட்டதை உணர்ந்து அதற்கு ஏற்ப மட்டையை சுழட்டினர். 20.2 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தாண்டியது.

அணிக்கு புத்துயிர் ஊட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 163 ரன்களாக உயர்ந்த போது துரதிர்ஷ்டவசமாக ரன்–அவுட்டில் பிரிந்தது. ஒரு ரன்னுக்கு அழைத்த கோலி, பிறகு திரும்பி ஓடும்படி ஷிகர் தவானை (73 ரன், 76 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) நோக்கி கூறினார். அதற்குள் மிஸ்பா உல்–ஹக் தவானை காலி செய்து விட்டார்.

இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். கோலி மறுபடியும் கண்டம் தப்பினார். 76 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் வீணடித்தார். அதற்குரிய விளைவு பாகிஸ்தானியருக்கு சம்மட்டி அடியாக விழுந்தது.

இதன் பிறகு கோலியும், சுரேஷ் ரெய்னாவும் அடித்து விளையாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். ரெய்னா அவ்வப்போது லெக்சைடில் சிக்சர்களை தூக்கியடித்து உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். பொறுமையுடன், நேர்த்தியாக ஆடிய கோலி தனது 22–வது சதத்தை நிறைவு செய்தார். இவர்கள் இருவரும் விளையாடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 330 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி சொதப்புவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.

ஸ்கோர் 273 ரன்களை எட்டிய போது விராட் கோலி (107 ரன், 126 பந்து, 8 பவுண்டரி) வைடாக சென்ற பந்தை அடிக்க முயற்சித்த போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ரெய்னா 74 ரன்களில் (56 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) பெலியன் திரும்பினார். கேப்டன் டோனி (18 ரன், 13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) உள்பட மேலும் சில விக்கெட்டுள் அடுத்தடுத்து விழுந்ததால் 300 ரன்களை அடைவதே பெரும்பாடாக போய் விட்டது.

300 ரன்கள் குவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அந்த சமயத்தில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1996–ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உலக கோப்பையில் அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் இவர் தான்.

நெருக்கடியில் தள்ளாட்டம்
அடுத்து கடினமான இலக்கை நோக்கி அகமது ஷேசாத்தும், யூனிஸ்கானும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். அனுபவ வீரர் யூனிஸ்கான் 6 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

பீல்டிங்கிலும், பந்து வீச்சிலும் ஆக்ரோஷமாகவும், துடுக்குத்தனத்துடன் செயல்பட்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்துக் கொண்டே இருந்தனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்கள் சுலபமாக ரன் எடுக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டனர். ரன் தேவை உயர்ந்து கொண்டே போனதால் அடித்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் பாகிஸ்தான் வீரர்களை விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் அகமது ஷேசாத்துக்கும் (47 ரன், 5 பவுண்டரி), சோகைப் மசூத்துக்கும் (0) ‘செக்’ வைத்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியா வெற்றி
சீரான இடைவெளியில் விழுந்த விக்கெட் சரிவை எந்த ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் (76 ரன், 84 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) போராடிய போதிலும் அதனால் அந்த அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போதும் பணியாத இந்தியா, அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்ற 6–வது வெற்றி இதுவாகும். விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்திய அணி தனது அடுத்த லீக்கில் வருகிற 22–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் சர்மா (சி) மிஸ்பா (பி) சோகைல் கான் 15

தவான் (ரன்–அவுட்) 73

விராட் கோலி(சி) கம்ரன் அக்மல் (பி) சோகைல் கான் 107

ரெய்னா (சி) ஹாரிஸ் சோகைல் (பி) சோகைல் கான் 74

டோனி (சி) மிஸ்பா (பி) சோகைல் கான் 18

ரவீந்திர ஜடேஜா (பி) வஹாப் ரியாஸ் 3

ரஹானே (பி) சோகைல் கான் 0

அஸ்வின் (நாட்–அவுட்) 1

முகமது ஷமி (நாட்–அவுட்) 3

எக்ஸ்டிரா 6

மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 300

விக்கெட் வீழ்ச்சி: 1–34, 2–163, 3–273, 4–284, 5–296, 6–296, 7–296

பந்து வீச்சு விவரம்

முகமது இர்பான் 10–0–58–0

சோகைல் கான் 10–0–55–5

அப்ரிடி 8–0–50–0

வஹாப் ரியாஸ் 10–0–49–1

யாசிர் ஷா 8–0–60–0

ஹாரிஸ் சோகைல் 4–0–26–0

பாகிஸ்தான்

அகமது ஷேசாத் (சி) ஜடேஜா (பி) யாதவ் 47

யூனிஸ்கான் (சி) டோனி (பி) ஷமி 6

ஹாரிஸ் சோகைல் (சி) ரெய்னா (பி) அஸ்வின் 36

மிஸ்பா உல்–ஹக் (சி) ரஹானே (பி) ஷமி 76

சோகைப் மசூத்(சி) ரெய்னா (பி) யாதவ் 0

உமர் அக்மல் (சி) டோனி (பி) ஜடேஜா 0

அப்ரிடி (சி) கோலி (பி) ஷமி 22

வஹாப் ரியாஸ் (சி) டோனி (பி) ஷமி 4

யாசிர் ஷா (சி) யாதவ் (பி) மொகித் 13

சோகைல் கான் (சி) யாதவ் (பி) மொகித் 7

முகமது இர்பான் (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 12

மொத்தம் (47 ஓவர்களில் ஆல்–அவுட்) 224

விக்கெட் வீழ்ச்சி: 1–11, 2–79, 3–102, 4–102, 5–103, 6–149, 7–154, 8–203, 9–220

பந்து வீச்சு விவரம்

உமேஷ் யாதவ் 10–0–50–2

முகமது ஷமி 9–1–35–4

மொகித் ஷர்மா 9–0–35–2

ரெய்னா 1–0–6–0

அஸ்வின் 8–3–41–1

ஜடேஜா 10–0–56–1

https://goo.gl/HFKNGw


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்