கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து
First Published : Thursday , 12th April 2018 07:46:03 PM
Last Updated : Thursday , 12th April 2018 07:46:03 PM
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு காட்டியதற்கு கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, மோடிக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
5 கிலோமீட்டர் தூரத்தைக் கூட சாலையில் பயணிக்க முடியாமல், ஹெலிகாப்டரில் பறந்து கடக்க வேண்டிய நிலை. எங்கு பார்த்தாலும் கறுப்புக் கொடி, கறுப்பு பலூன்கள்தான்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் செய்தனர்.
விவசாயிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் திரைப்பட துறை சார்பில் மவுன போராட்டம் நடந்தது. கடையடைப்பு போராட்டமும் நடந்தது.
மேலும், சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்த பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், மாமல்லப்புரத்தில் நடந்த ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் சாலையெங்கும் கறுப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கருத்து:
"கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி."