கிழமை தோறும் வழிபாடு

கிழமை தோறும் வழிபாடு

ஞாயிற்றுக் கிழமை

விநாயகர் வழிபாடு:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்டு

துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம்

தப்பாமல் சார் வார் தமக்கு.

 

முருகன் வழிபாடு:

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கை தொழுவேன் நான்.

 

அம்மன் வழிபாடு:

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளைப் புவி அடங்கக்

காத்தாளை, அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு, வில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

சிவன் வழிபாடு

போற்றியோ நமச்சிவாய! புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றியோ நமச்சிவாய! புகலிடம் பிறிது ஒன்று இல்லை

போற்றியோ நமச்சிவாய! புறர் எனைப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய! சயசய போற்றி; போற்றி.

 

பெருமாள் வழிபாடு

திங்கள் செவ்வாயிலுன் திருவமு தருந்தினால்

தீராத வினை தீருமே

பொங்கு புதன் வியாழனில் பூஜை செய்தால்

பூர்வ பாவம் நீங்குமே

மங்கலம் வெள்ளி சனி ஞாயிறில் உன்னையே

மனது வைத்தால் இன்பமே

மங்காத மாதமே வருஷம் சகாப்தமே

மகராஜ திருமால் சுகமே!

சூரியன் வழிபாடு:

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய்

 

திங்கட்கிழமை

விநாயகர் வழிபாடு:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா.

முருகன் வழிபாடு

நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயுங் குமரேசரிரு

தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

அம்மன் வழிபாடு:

கருத்தன எந்தை தன்கண் அன, வண்ணக் கனவெற்பிற்

பெருத்தன, பால் அழும்பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்

திருத்தன, பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருத்து அனமூரலும் நீயும் அம்மே; வந்து என் முன் நிற்கவே.

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மின்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னை உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

ஆஞ்சனேயர் வழிபாடு:

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் அளித்துக் காப்பான்.

 

சந்திரன் வழிபாடு:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி, திருவருள் தருவாய்

சந்திரா போற்றி, சத்குரு போற்றி

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி

செவ்வாய் கிழமை

விநாயகர் வழிபாடு:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புத்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

 

முருகன் வழிபாடு:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

அம்மன் வழிபாடு:

உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம்; மாதுளம் போது! மலர்க்கமலை!

துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக் குங்கும தோயம் உன்ன

விதிக்கின்ற மேனி! அபிராமி எந்தன் விழித்துணையே.

 

சிவன் வழிபாடு:

நம்மானம் மாற்றி நமக்கருளாய் நின்ற

பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை

அம்மாளை அந்தணர் சேரும் அணிகாழி

எம்மானை ஏத்தவல் லார்க்கு இடர் இல்லையே.

 

இராமன் வழிபாடு:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இன்மையை ராம வென்றிரண்டெழுத்தினால்

 

செவ்வாய் வழிபாடு:

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே

குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ

மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீங்கு.

 

புதன் கிழமை

 

விநாயகர் வழிபாடு:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த

தொல்லைபோம்; போகாத் துயரம் போம்

நல்லகுணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு

கணபதியைக் கைதொழுதக் கால்.

 

முருகன் வழிபாடு:

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்

ஒரு கால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்

முருகா வென்றோது வார்முன்.

 

அம்மன் வழிபாடு:

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்

ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றுகில்லா

வெளியே! வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!

 

சிவன் வழிபாடு:

சிவனோ டொக்குந் தெய்வந் தேடினுமில்லை

அவனோ டொப் பாரிங்கு யாவரும் மில்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னுந்

தவனச் சடைமுடித் தாமரை யானே.

புதன் வழிபாடு:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புத பகவானே பொன்னடி போற்றி

பதந்தந் தாள் வாய் பண்ணொலியானே

உதவியே யருளும் உத்தமா போற்றி.

 

வியாழக் கிழமை

விநாயகர் வழிபாடு:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து.

 

முருகன் வழிபாடு:

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீரவேல் சேவ்வேள் திருக்கைவேல் - வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை.

 

அம்மன் வழிபாடு:

நாயகி, நான்முகி, நாராயணி கைநளினபஞ்ச

சாயகி, சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆய, கியாதியுடையாள் சரணம் அரண்நமக்கே.

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னை உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

 

கண்ணன் வழிபாடு:

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமரர்ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிரயான் போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

வியாழன் வழிபாடு:

குணமிகு வியாழ குரு பகவானே

மனமுடன் வாழ மகிழ்வுடனருள் வாய்

ப்ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா

க்ரக தோஷமின்றிக் கடாசஷித் தருள்வாய்.

வெள்ளிக் கிழமை:

விநாயகர் வழிபாடு:

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே

சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்

எங்கள் குலவிடிவிளக்கே எழில் மணியே கணபதியே

 

முருகன் வழிபாடு:

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்வேன் பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா செந்தில் வாழ்வே?

 

அம்மன் வழிபாடு:

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்

பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்

கனையும் கரும்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்

அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

 

சிவன் வழிபாடு:

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

 

ஐயப்பன் வழிபாடு:

தாய் மடியைத் தேடியங்கே

தாவிவரும் கன்றுகளாய்

வய்திறந்து பாடிவந்தோம் ஐயப்பா! உன்

வாசலுக்கே ஓடிவந்தோம் ஐயப்பா

நீ யிருக்க உனது மக்கள்

யார் முகத்தில் போய் விழிப்போம்!

சேய் முகத்தைப் பாராயோ ஐயப்பா! உன்

திரு வருளைத் தாராயோ ஐயப்பா!

 

வெள்ளி வழிபாடு:

சுக்கிரமூர்த்தி சுபமிக அருள்வாய்

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்

வெள்ளிச் சுக்கிர வித்தகு வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

 

சனிக் கிழமை

விநாயகர் வழிபாடு

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சோல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.

முருகன் வழிபாடு:

காக்கக் கடவியநீ காவாது இருந்தாக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்குங்

கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்ல

இடங்காண் இரங்காய் இனி.

 

அம்மன் வழிபாடு:

வந்திருப்பவர் உன்னை வானவர்தானவர்; ஆனவர்கள்

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர்; சிந்தையுள்ளேன்

பந்திப்பவர் அழி யாப்பரமானந்தர்; பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம்பிராட்டி! நின்தண் அளியே

 

சிவன் வழிபாடு:

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே.

 

திருவேங்கடவன் வழிபாடு:

 

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே! வேங்கடவா! நின்கோவிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேன்.

 

சனி வழிபாடு:

சங்கடந் தீர்க்கும் சனிபகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா.

https://goo.gl/v4tSYa


17 Jun 2014

கல்வியில் சிறக்க

17 Jun 2014

சனிபகவான் ஸ்லோகம்

17 Jun 2014

மந்திரம்

02 Feb 2014

தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:

05 Nov 2013

திருடர் பயமா கவலை வேண்டாம்

30 Sep 2013

துர்கை வழிபாடு

17 Apr 2013

கிழமை தோறும் வழிபாடு

11 Aug 2009

தமிழ் அர்ச்சனைகள்

11 Aug 2009

தமிழ் அர்ச்சனைகள்

11 Aug 2009

தமிழ் அர்ச்சனைகள்