திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா, இன்று (16–ந்தேதி - சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு கொடிஏற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.

திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுடன் தினமும் காலை, மாலை ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

2–ம் திருநாளான 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் திருவீதி உலா செல்கின்றனர்.

3–ம் திருநாளான 18–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துகிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருகின்றனர்.

4–ம் திருநாளான 19–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வானத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

5–ம் திருநாளான 20–ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

6–ம் திருநாளான 21–ந்தேதி (வியாழக்கிழமை) காலை சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.

7–ம் திருநாளான 22–ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமான் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருள்கிறார்.

8–ம் திருநாளான 23–ந்தேதி (சனிக்கிழமை) சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர், பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.

மேலக்கோவிலில் இருந்து அபிஷேகத்திற்கு பின்னர் குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும், வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக்கோவில் வந்தடைகிறார்கள்.

9–ம் திருநாளான 24–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கின்றனர். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி இரவு எட்டு வீதிகளிலும் வலம் வந்து இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

10–ம் திருநாளான 25–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் பவனி வருகிறார்கள்.

11–ம் திருநாளான 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்மன் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடக்கிறது. அதன்பிறகு சுவாமி, அம்மன் மலர் சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்று வந்து, பின் மேலக்கோவில் வருகிறார்கள்.

12–ம் திருநாளான 27–ந்தேதி (புதன்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, அம்மன் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

விழா நாட்களில் தினமும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

https://goo.gl/5tEHq3


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு