நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி

நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான பரபரப்பான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கார்டிப் நகரில் நேற்று நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மில்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் குசால் பெரேரா "டக்-அவுட்' ஆனார். மற்றொரு துவக்க வீரர் தில்ஷன் (20), மிட்சல் மெக்லினகன் "வேகத்தில்' போல்டானார். அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (4), தினேஷ் சண்டிமால் (0), கேப்டன் மாத்யூஸ் (9) ஏமாற்றினர். திரிமன்னே (9) "ரன்-அவுட்' ஆனார்.

விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடிய சங்ககரா, வில்லியம்சன் பந்தில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். பொறுப்பாக ஆடிய சங்ககரா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 75வது அரைசதத்தை பதிவு செய்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த திசாரா பெரேரா (15) நிலைக்கவில்லை. சங்ககரா 68 ரன்கள் எடுத்த போது நாதன் மெக்கலம் "சுழலில்' சிக்கினார். அடுத்து வந்த ஷமிந்தா எரங்கா (0), லசித் மலிங்கா (2) ஏமாற்றினர்.

இலங்கை அணி 37.5 ஓவரில் 138 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. ஹெராத் (8) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் மிட்சல் மெக்லினகன் 4, நாதன் மெக்கலம், மில்ஸ் தலா 2, டேனியல் வெட்டோரி ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு லூக் ரோஞ்சி (7) ஏமாற்றினார். அடுத்து வந்த வில்லியம்சன் (16), மலிங்காவிடம் சரணடைந்தார். ஹெராத் "சுழலில்' ராஸ் டெய்லர் "டக்-அவுட்' ஆனார். மலிங்கா பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த மார்டின் கப்டில் (25), ஷமிந்தா எரங்கா "வேகத்தில்' வெளியேறினார்.


இதனால் நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் 49 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அடுத்து வந்த ஜேம்ஸ் பிராங்க்ளின் (6), டேனியல் வெட்டோரி (5) நிலைக்கவில்லை. பின் இணைந்த பிரண்டன் மெக்கலம், நாதன் மெக்கலம் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏழாவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்த போது மலிங்கா "வேகத்தில்' பிரண்டன் மெக்கலம் (18) போல்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த நாதன் மெக்கலம் (32), மலிங்கா பந்தில் அவுட்டானார். ஒரு ரன்னுக்காக ஓடிய டிம் சவுத்தி (3), "ரன்-அவுட்'டாக "டென்ஷன்' எகிறியது. கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய டிம் சவுத்தி (13*), மிட்சல் மெக்லினகன் (1*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

நியூசிலாந்து அணி 36.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் மலிங்கா 4, எரங்கா 2 விக்கெட் கைப்பற்றினர்.

நேற்று, 20வது ஓவரின் கடைசி பந்தை இலங்கையின் லசித் மலிங்கா "யார்க்கராக' வீசினார். இப்பந்து நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரியின் காலில் பட்டது. உடனடியாக எல்.பி.டபிள்யு., கேட்டு மலிங்கா "அப்பீல்' செய்ய, அம்பயர் "அவுட்' கொடுத்தார். ஆனால் "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தில், பந்து பேட்டில் லேசாக உரசி சென்றது தெளிவாக காட்டப்பட்டது.

நியூசிலாந்து அணி, அம்பயர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தியதால், வெட்டோரி (5 ரன்) பரிதாபத்துடன் வெளியேறினார்.
https://goo.gl/2J2BEw


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்