மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக கோயிலில் வடக்கு& மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.அதிகாலை 5 மணிக்கு சுவாமியும், அம்மனும் அலங்காரம் செய்யப்பட்டு பழைய கல்யாண மண்டபத்திற்குள் உள்ள சூறாவளி சுப்பையர் மண்டபம் வந்தனர். அங்கிருந்து வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டு அம்மன் சன்னதி வழியாக 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து, மீண்டும் அம்மன் சன்னதிக்கு வந்தனர்.

முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி, தீபாராதனை நடந்தது. அம்மன், சுவாமி, திருப்பரங்குன்றம் முருகன், பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டப மேடைக்கு காலை 7.56 மணிக்கு வந்து சேர்ந்தனர்.காலை 8.06 மணிக்கு திருமண விழா துவங்கியது. 15 ஓதுவார்கள் வேதமந்திரம் ஓத, யாகங்கள் வளர்க்கப்பட்டன. சிவாச்சாரியர் பிரகாஷ் பட்டர் சுவாமி சுந்தரேஸ்வரராகவும்,  சிவாச்சாரியார் சுவாமிநாதன் மீனாட்சியாகவும் வேடம் பூண்டிருந்தனர். இவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்பு வேடம் பூண்ட சிவாச்சாரியார்கள் சுவாமி, பிரியாவிடை, மீனாட்சிக்கு காப்பு கட்டினர். பின்பு சுவாமிக்கும், மீனாட்சிக்கும் பாதபூஜை செய்தனர்.

சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை புனித நீர் கொண்டு தாரைவார்க்கும் வைபவம் நடந்தது. அப்போது 27 சுமங்கலி பெண்கள் நவதானிய பூஜை செய்தனர். பின்பு பட்டர்கள் இருவரும் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து எடுத்து, பக்தர்களுக்கு காட்டினர். மங்களவாத்தியம் முழங்க 8.44 மணிக்கு மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அடுத்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்கள் கையில் இருந்த பூக்களை சுவாமிக்கு தூவி வாழ்த்து தெரிவித்து வணங்கினர்.

திருக்கல்யாணம் முடிந்ததும், அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்கள் மாங்கல்யத்துக்கு புதிதாக மஞ்சள் கயிறு மாட்டிக் கொண்டனர்.  9.15 மணிக்கு மணமேடையிலிருந்து புறப்பட்ட சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபம் வந்தனர். அங்கு மாலை 4 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணக்கோலத்தில் இருந்த சுவாமியை தரிசனம் செய்தனர்.  இரவு 7 மணிக்கு மேல் அம்மன் பூப்பல்லக்கிலும், சுவாமி யானை வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, இரவு 11 மணிக்கு கோயில் சென்றடைந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் தனித்தேரிலும் மதுரை நகரில் உள்ள நான்கு மாசி வீதியில் வலம் வருவார்கள்.
https://goo.gl/EejpFw


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு