18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்
தீர்ப்பு
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

 
அவருக்கு டி.டி.வி. தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் செயல்பட நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியிருந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான எஸ்.டி.கே.ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளராக மாறினார்.

இதையடுத்து செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது.

கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. 3-வது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 12 நாட்களுக்கு விசாரணை நடத்தினார்.

ஆகஸ்டு 31-ந்தேதி இந்த வழக்கின் இறுதி கட்ட வக்கீல்கள் வாதம் நடந்தது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை 3-வது நீதிபதி சத்திய நாராயணன் ஒத்திவைத்தார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. இந்த நிலையில் 54 நாட்களுக்கு பிறகு இன்று தீர்ப்பை சத்திய நாராயணன் வழங்கினார்.இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் வைத்தியநாதன், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம், கொறடா சார்பில் முகுல்ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் எந்தவிதத்திலும் சட்ட விரோதமானது அல்ல.

இந்த வி‌ஷயத்தில் சபாநாயகர் முடிவில் எந்த தவறும் இல்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையும் நீக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையும் விலக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கடந்த ஜூன் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழங்கி இருந்த தீர்ப்பை இன்று 3-வது நீதிபதி சத்திய நாராயணன் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. மாறாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பெரும்பான்மை பலத்துடன் திகழ்கிறது.

தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். இந்த எண்ணிக்கையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும் ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு உறுதி செய்து இருப்பதால் சட்டசபையில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் 108 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அரசுக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

மொத்த இடம் - 234
அ.தி.மு.க. 109
கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி - 3
தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் - 3 (பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி)
திமுக - 88
காங்கிரஸ் - 8
தினகரன் - 1
முஸ்லிம் லீக் - 1
சபாநாயகர் - 1
காலி இடங்கள் - 20

காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், தேர்தலை நடத்தலாம் என்றும் கோர்ட்டு அறிவித்துள்ளது.


14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்