2-வது டெஸ்ட் கிரிக்கெட்-தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

2-வது டெஸ்ட் கிரிக்கெட்-தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
2-வது டெஸ்ட் கிரிக்கெட்-தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
போர்ட் எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி மெகா வெற்றிபெற்றது.
தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 423 ரன்களும், ஆஸ்திரேலியா 246 ரன்களும் எடுத்தன. 177 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. ஹஷிம் அம்லா 93 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய அம்லா தனது 21-வது சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் காலிஸ் (45 சதம்), கேப்டன் கிரேமி சுமித் (27 சதம்) ஆகியோருக்கு அடுத்து கேரி கிர்ஸ்டனுடன் (21 சதம்) 3-வது இடத்தை அம்லா பகிர்ந்து கொண்டுள்ளார்.

அம்லாவுக்கு ஒத்துழைப்பு தந்து ஆடிக் கொண்டிருந்த குயின்டான் டீ காக் 34 ரன்களில் கேட்ச் ஆனார். மதிய உணவு இடைவேளைக்கு 40 நிமிடங்களுக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 270 ரன்களுடன் 2-வது இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. அம்லா 127 ரன்களுடன் (176 பந்து, 16 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி நாளில் பலத்த மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்ததாலேயே தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை சீக்கிரமாக முடித்துக் கொண்டது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 448 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இமாலய இலக்கை நோக்கி கிறிஸ் ரோஜர்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சை தொடங்கினர். அதிரடி காட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். வார்னர் 66 ரன்களில் (73 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் டுமினியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
தொடக்க ஜோடி பிரிந்ததும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. ஒரு பக்கம் கிறிஸ் ரோஜர்ஸ் போராடிக் கொண்டிருக்க மறுமுனையில் அலெக்ஸ் டூலன் (5 ரன்), ஷான் மார்ஷ் (0), கேப்டன் மைக்கேல் கிளார்க் (1 ரன்), ஸ்டீவன் சுமித் (0), விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் (1 ரன்), மிட்செல் ஜான்சன் (6 ரன்), ரையான் ஹாரிஸ் (6 ரன்) வரிசையாக நடையை கட்டினர்.

இதற்கு மத்தியில் தனது 4-வது சதத்தை அடித்த கிறிஸ் ரோஜர்ஸ் (107 ரன், 237 பந்து, 12 பவுண்டரி) 9-வது விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து நாதன் லயன் (0) கடைசி வீரராக வெளியேற ஆஸ்திரேலிய அணி 73.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது.

இதனால் தென்ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும்இரட்டை இலக்கை தொடவில்லை.

தென்ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டுகளும், மோர்கல், டுமினி, எல்கர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

போர்ட்எலிசபெத்தில் இன்று (பிப்.24) மழை கொட்டி தீர்க்கும் என்றும், மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை மனதில் கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாளிலேயே ஆஸ்திரேலியாவின் கதையை முடித்து விட்டது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

https://goo.gl/fysWh8


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்