45 நாடுகள் பங்கேற்பு ஆசிய விளையாட்டு இன்று தொடக்கம்: 515 இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள்

45  நாடுகள் பங்கேற்பு ஆசிய விளையாட்டு இன்று தொடக்கம்: 515 இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள்
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்குகிறது.

அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி 17–வது ஆசிய விளையாட்டு திருவிழா தென்கொரியாவின் இன்சியோன் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4–ந்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்திய தரப்பில் 516 பேர் கொண்ட குழுவினர் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 163 பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளும் வீரர்களுடன் சென்றுள்ளனர். குவாங்சூவில் 2010–ம் ஆண்டு நடந்த முந்தைய ஆசிய போட்டியில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்களை கைப்பற்றியது. அப்போது இந்தியா தரப்பில் 626 பேர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த தடவை எண்ணிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டது. நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதியேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஆக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.

‘அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 64 பதக்கங்களை வென்றது. இப்போது ஆசிய விளையாட்டுக்கு பதக்க வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை மட்டும் அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளோம். இதில் இந்தியா 70 முதல் 75 பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் ஜிஜி தாம்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் துப்பாக்கி சுடுதல், தடகளம், கபடி, குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், வில்வித்தை, ஆக்கி போன்றவற்றில் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, ஏற்கனவே ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியிலும் தங்கம் வென்றவர். ஆசிய விளையாட்டில் தனிநபர் பிரிவில் மட்டும் தங்கம் எதுவும் வெல்லாத அவருக்கு அதையும் தனது பெயரில் இணைத்துக் கொள்ள இதுவே சரியான தருணமாகும். ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற ககன்நரங், காமன்வெல்த்தில் தங்கம் வென்ற ஜிது ராய் மற்றும் அபூர்வி சண்டேலா, மலைக்கா கோயல், அயோனிகா, விஜய்குமார், ராஹி சர்னோபாத் ஆகியோரும் பதக்கத்தை ‘சுடுவதற்கு’ பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் இந்தியா கடைசியாக 1986–ம் ஆண்டு தங்கம் வென்றது. 28 ஆண்டு கால தங்க ஏக்கத்தை இந்த முறை மல்யுத்த ஹீரோ யோகேஷ்வர்தத் போக்குவார் என்று நம்பப்படுகிறது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாதனையாளரான இவர் சமீபத்தில் காமன்வெல்த்திலும் தங்க நாயகனாக வலம் வந்தார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில்குமார் விலகி விட்டதால் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் களம் காணும் யோகேஷ்வர் மீதே ஒட்டுமொத்த பார்வையும் பதிந்திருக்கிறது.

பேட்மிண்டனில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோருக்கு பதக்கம் கிட்டலாம். ஆனால் சீனா, இந்தோனேஷியாவின் ராஜ்ஜியத்தை தகர்த்தால் மட்டுமே இவர்களின் கனவு நனவாகும். ஆசிய பேட்மிண்டனில் இந்தியா இதுவரை தங்கம் எதுவும் வென்றதில்லை. வெறும் 7 வெண்கலம் மட்டுமே பெற்றிருக்கிறது. அதுவும் கடைசி வெண்கலம் கிடைத்து 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

லியாண்டர் பெயஸ், சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் போபண்ணா ஆகியோரின் விலகலால் இந்திய டென்னிஸ் அணி பலவீனமடைந்து விட்டது. ஆனாலும் சானியா மிர்சா மட்டும் கொஞ்சம் நம்பிக்கை தருகிறார். அவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வாங்கலாம்.

வில்வித்தை மங்கை தீபிகா குமாரியையும் பதக்க வாய்ப்பில் இருந்து ஓரங்கட்டி விட முடியாது. ஆனால் வில்வித்தையில் கொடிகட்டி பறக்கும் கொரியாவின் சவாலை சமாளிப்பதை பொறுத்தே இவரது கழுத்தை பதக்கமாலை அலங்கரிக்குமா? என்பது தெரிய வரும்.

குத்துச்சண்டை அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றரும், முன்னாள் உலக சாம்பியனுமான வீராங்கனை மேரிகோம் (51 கிலோ பிரிவு) சாதிக்க நிறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி தேவேந்திர சிங், ஷிவ தபா, அகில்குமார், மனோஜ்குமார் உள்ளிட்டோரும் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்கிறார்கள்.

தடகளத்தில் 56 இந்தியர் தடம் பதிக்க இருந்தாலும், காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வட்டு எறிதல் வீரர் விகாஷ் கவுடா, வட்டு எறிதல் வீராங்கனைகள் கிருஷ்ண பூனியா, சீமா பூனியா, ஓட்டப்பந்தய வீராங்கனைகள் அஷ்வினி, டின்டு லூக்கா, பிரீஜா ஸ்ரீதரன், சுதா சிங் ஆகியோர் தான் பதக்க வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள்.

பளுதூக்குதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் 77 கிலோ எடைப்பிரிவில் இறங்குகிறார். ஆசிய மல்யுத்தத்தில் இதுவரை தங்கம் வென்றதில்லை என்ற இந்தியாவின் நீண்ட கால சோதனைக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்.

இதே போல் காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையரில் தங்கத்தை வசப்படுத்திய ஜோடியான தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோரையும் விட்டு விட முடியாது. ஆனால் ஆசிய விளையாட்டு ஸ்குவாஷியில் இரட்டையர் பிரிவு கிடையாது. ஒற்றையரில் தீபிகாவும், ஜோஷ்னாவும் கால்இறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் சீனா (894 பேர்), தென்கொரியா (833 பேர்), ஜப்பான் (718 பேர்) உள்ளிட்ட நாடுகள் பதக்க வேட்டையில் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா கடந்த முறை 199 தங்கத்தை அள்ளியது நினைவிருக்கலாம்.

ஆசிய விளையாட்டின் கோலாகலமான தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ‘450 கோடி மக்களின் கனவு ஒரே ஆசியா’ என்ற கருத்தை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. ‘ஆசியாட்’ என்ற பாடலை தென்கொரிய பாடகி ஜோ சுமி பாடுகிறார். அதன் பிறகு கொரியாவின் வரலாற்றையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஒவ்வொரு அணிகளும் அணிவகுத்து செல்வது வழக்கம். இந்திய அணி ஆக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து செல்ல இருக்கிறது.

தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் அனைத்தையும் டென் ஸ்போர்ட்ஸ், டென் ஆக்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


1990–ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் ஆண்கள் கபடி முதல் முறையாக அறிமுகம் ஆனது. ஒவ்வொரு முறையும் இந்திய அணியே தங்கம் வென்றிருக்கிறது. பெண்கள் பிரிவில் 2010–ம் ஆண்டு கபடி கொண்டு வரப்பட்டது. இதிலும் இந்தியாவுக்கே முதல் தங்கம் கிடைத்தது. இந்த முறையும் கபடியில் இந்தியாவின் பிடியை எதிரணிகளால் தளர்த்துவது கடினம் தான். ஆனால் இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு அதிகமான பதக்கங்கள் தடகளத்தில் தான் கிடைத்திருக்கின்றன. இதில் இதுவரை 70 தங்கம், 73 வெள்ளி, 76 வெண்கலம் என்று மொத்தம் 219 பதக்கங்கள் வந்துள்ளன.

‘தங்க மங்கை’ என்று அழைக்கப்படும் முன்னாள் தடகளபுயல் பி.டி.உஷா ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற இந்தியர் ஆவார். அவர் 4 தங்கமும், 7 வெள்ளியும் கைப்பற்றி இருக்கிறார். 1986–ம் ஆண்டு சியோல் ஆசிய விளையாட்டில் மட்டும் 4 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்று ஆசிய தடகளத்தின் ராணியாக மகுடம் சூட்டப்பட்டார்.
https://goo.gl/7Yguhe


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்