5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை

5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
இதன்மூலம் ஆசிய கோப்பையை 5-வது முறையாக கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையைப் பெற்றது இலங்கை. ஆசிய கோப்பையை 5 முறை கைப்பற்றிய மற்றொரு அணி இந்தியாவாகும்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

வங்கதேசத்தின் மிர்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மசூத், அப்துல் ரெஹ்மான் ஆகியோருக்குப் பதிலாக ஷர்ஜீல் கான், ஜுனைத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இலங்கை அணியில் அஜந்தா மென்டிஸுக்குப் பதில் லசித் மலிங்கா இடம்பெற்றார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷர்ஜீல் கான் (8), அஹமது ஷெஸாத் (5), பின்னர் வந்த முகமது ஹபீஸ் (3) ஆகியோர் லசித் மலிங்காவின் வேகத்தில் வீழ்ந்தனர். இதனால் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது பாகிஸ்தான்.

இதையடுத்து கேப்டன் மிஸ்பா உல் ஹக்குடன் இணைந்தார் ஃபவாட் ஆலம். இந்த ஜோடி நிதானமாக ஆடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டது. மிஸ்பா உல் ஹக் 19 ரன்களில் இருந்தபோது மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சங்ககாராவிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததால் தப்பிப் பிழைத்தார்.

மிஸ்பாவும், ஆலமும் ஆமை வேகத்தில் ஆடியதால் 31-வது ஓவரில்தான் 100 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். மிஸ்பா உல் ஹக் 78 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து ஃபவாட் ஆலம் 91 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பிறகு இந்த ஜோடி அதிரடியில் இறங்கியபோது மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்தார். 98 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். அப்போது பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா-ஆலம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஃபவாட் ஆலமுடன் இணைந்தார் உமர் அக்மல். இந்த ஜோடி அதிரடியில் இறங்க பாகிஸ்தானின் ரன் வேகம் மளமளவென உயர்ந்தது. மலிங்கா வீசிய 47-வது ஓவரில் உமர் அக்மல் 3 பவுண்டரிகளை விளாசினார். 92 ரன்களில் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய ஃபவாட் ஆலம், திசாரா பெரேரா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து ஒருநாள் போட்டியில் முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 126 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உதவியுடன் சதத்தை எட்டினார்.

அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் பவுண்டரி அடித்து 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் உமர் அக்மல். அவர் 42 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து மலிங்கா வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. ஃபவாட் ஆலம் 134 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உமர் அக்மல்-ஃபவாட் ஆலம் ஜோடி 13 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தரப்பில் மலிங்கா 10 ஓவர்களில் 56 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

261 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை அணிக்கு குஷல் பெரேரா-திரிமானி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா 37 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த குமார் சங்ககாரா தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். இந்த இரு விக்கெட்டுகளையும் அஜ்மல் வீழ்த்தினார்.

இதையடுத்து திரிமானியுடன் இணைந்தார் மஹேல ஜெயவர்த்தனா. இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பிய ஜெயவர்த்தனா, இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார். மறுமுனையில் திரிமானியும் அசத்தலாக ஆட, 19.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை.

வேகமாக விளையாடிய திரிமானி 52 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய ஜெயவர்த்தனா, உமர் குல் வீசிய 34-வது ஓவரில் பவுண்டரி அடித்து 76 பந்துகளில் அரைசதம் கண்டார். கடந்த 13 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த முதல் அரைசதம் இது.

அடுத்த பந்தில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய ஜெயவர்த்தனா, பின்னர் சில பவுண்டரிகளை விரட்டி வேகமாக ஆடினார். இலங்கை அணி 212 ரன்களை எட்டியபோது ஜெயவர்த்தனா ஆட்டமிழந்தார். 93 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார். ஜெயவர்த்தனா-திரிமானி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.

பின்னர் வந்த ஆஷன் பிரியஞ்சன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மேத்யூஸ் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய திரிமானி 106 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 3-வது சதமாகும். 108 பந்துகளைச் சந்தித்த அவர் 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து அஜ்மல் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து டி சில்வா களம்புகுந்தார். இறுதியில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

மேத்யூஸ் 16, டி சில்வா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு ரூ.36.5 லட்சமும், 2-வது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.18.25 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தன.

https://goo.gl/fh2apX


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்